மலேசியப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ள நிலையில், அவரது ராஜிநாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து நாட்டின் இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி அவர் மகாதீரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் மாமன்னர் அடுத்து ஆட்சியமைக்குமாறு யாரை அழைக்கப் போகிறார்? எனும் கேள்வி எழுந்துள்ளது.
மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்கள் உள்ளன. ஆட்சியமைக்க 112 எம்பிக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 102 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகளைக் கொண்ட தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் 129 எம்பிக்கள் இருப்பதாகவும், இது குறித்து மாமன்னரைச் சந்தித்து விவரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.